search icon
என் மலர்tooltip icon
    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும், இதற்காக 1975 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.
    • வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் ஏன் இங்கு வரவில்லை?

    பெங்களூரு:

    கர்நாடாக மாநிலத்தின் பெங்களூரு நகரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, தேர்தல் கட்டுப்பாடுகளால் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் என்றதும் பிரதமர் மோடி ஓடோடி வருகிறார். வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

    கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிவித்தோம்.

    மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதினோ.

    இதுவரை கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பிரதமர் மோடி ஒரு பைசா கூட வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    • புது வால்வோ காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
    • மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் சிங்கில் வேரியண்டுக்கான முன்பதிவுகளை துவங்கியது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். முன்பதிவு வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.


     

    புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.


     

    இதில் உள்ள வால்வோ ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    • பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார்.
    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்

    கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன் கைலாஷ் யாத்திரை சென்றேன். அப்போது சேலத்தை சேர்ந்த ரத்தின வேல் என்பவர் என்னுடன் வந்தார்.

    அவர் சேலத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது முதல் சேலத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் இப்போது நம்மிடம் இல்லை என்று பேசியுள்ளார்.

    இதனையடுத்து, மோடிக்கு உண்மையாகவே சேலத்தில் ஒரு நண்பர் இருந்தாரா? இல்லை சேலத்தில் பேசுவதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
    • ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.

    நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.

    தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    • ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் இணைந்த வண்ணம் உள்ளது.

    அந்த வகையில் இந்திய வீரர்களான ரோகித், விராட் ஆகியோர் அவர்களது அணியான மும்பை, பெங்களூர் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் RIP ஹர்திக் பாண்ட்யா என்ற ஹேஸ்டேக் மற்றும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட வீடியோவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும் தான் காரணம். மும்பை நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர்.

    அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ரோகித் சோகமான முகத்துடன் காணப்பட்டனர். இதற்கு ரசிகர்கள் ரோகித்துடன் பாண்ட்யா உட்கார்ந்து இருப்பதை பார்க்க வேதனையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.

    மேலும் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரைக்கையாளர்கள் ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

    • அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.

    பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.

    இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
    • இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

    இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
    • பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

    காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    ×